தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, December 13, 2009

சரணடைய வந்த எல்டிடிஇ தலைவர்களைக் கொல்லச் சொன்னது கோத்தபயாதான் - பொன்சேகா


கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் உள்ளிட்ட 3 முக்கியத் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

ஈழப் போரின் முடிவுக்கு முன்பு ஒரே அணியில் இருந்த ராஜபக்சே, போன்சேகா, கோத்தபயா ஆகியோர் இப்போது இரு வேறு அணிகளாகப் பிரிந்து விட்டனர். இதையடுத்து ஒருவர் செய்த தவறுகளை மற்றவர் என மாற்றி மாற்றி போட்டுக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களை பாரபட்சம் பார்க்காமல் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் நாளிதழுக்கு பொன்சேகா அளித்துள்ள பேட்டி..

போரின் இறுதி நாட்களில் புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைவது பற்றிப் பேசப்பட்டது குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

புலிகளின் தலைவர்கள், நார்வே அரசு, பல்வேறு வெளிநாட்டுத் தரப்புகள், பசில் ராஜபக்ச போன்றோருக்கு இடையிலேயே இது பற்றிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முன்வந்தது பற்றி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அப்போது - களத்தில் போரில் ஈடுபட்டிருந்த 58வது டிவிசனின் தளபதியான பிரிகேடியர் சவீந்திர சில்வாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு - புலிகளின் முக்கிய தலைவர்கள் எவரும் சரணடைவதற்கு இடமளிக்க வேண்டாம். அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று கோத்தாபய கட்டளை இட்டிருந்தார் என்று பின்னரே எனக்குத் தெரியவந்தது.

மே 17ம் தே‌தி முள்ளிவாய்க்காலுக்கு வடக்கே புலிகள் 100 சதுர ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்பள‌வு பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் - விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறு‌ப்பாள‌ர் பா. நடேசன், சமாதான செயலக‌ப் ப‌ணி‌ப்பாள‌ர் புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஷ் ஆகியோர் சரணடைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக - விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எப்படிச் சரணடைவது என்பது குறித்து - மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக பல தகவல்கள் பரிமாறப்பட்டன.

விடுதலைப் புலிகளின் இரு அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசு ஒன்று, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இந்தப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

அப்போது - வெள்ளை‌‌க் கொடியை உயர்த்திக் காட்டிய படி ராணுவத்திடம் செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இதன் படியே அந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் சரணடைய முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

மே 17ஆம் தேதி நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் விடிகாலையில் விடுதலைப் புலிகளின் மூன்று தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக - கோத்தபயா ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் கலந்துரையாடிய பி்ன்னரே - வெள்ளை‌க் கொடியுட‌ன் போகுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

பொன்சேகா இவ்வாறு சொல்கிறாரே என்று தற்போது மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள சவீந்திர சில்வாவையும், ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காராவையும் தொடர்பு கொண்ட சண்டே லீடர் கேட்டபோது, அதுகுறித்து அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனராம்.

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails