தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Thursday, July 1, 2010

சோதிடம் என்பதும் அறிவியலா?

நாம் எல்லோரும் தினமும் வானைப் பார்க்கின்றோம். வானைப் பார்க்காத மனிதர்கள் உண்டா? இரவு பகல் எந்த நேரத்திலும் வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வால்மீன்கள், மேகங்கள் என பார்க்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல் தான் சோதிடமும். அதன் தோற்றமும், உண்மை பொய் பற்றியும் தெரியாது. எந்த விஷயமாக இருந்தாலும் பத்துபேர் சேர்ந்து சொல்லி விட்டாலோ, எழுத்துக்களில் வந்துவிட்டாலோ நம்மில் பெரும்பாலோர் 100 சதவீதம் உண்மையென்றே நம்பி விடுகின்றனர். வானியலையும். சோதிடத்தையும் பாலையும், காப்பியையும் ஒன்றாகக் கலப்பது போல் கலந்து குழப்பி விடுகின்றனர். தன் கைக்கு எட்டாத கண்ணில் படுகின்ற, தொலைவில் உள்ள பொருட்களின் மேல் செலுத்தும் கற்பனையும் விருப்பக்கருத்தும் அரைகுறையாளர்களின் புருடாவும் தான் சோதிடம்.
வானியல் என்றால் என்ன?
வானவியல் என்பது வானில் காணப்படும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் தவிர வானில் காணப்படும் கணக்கு தெரியாத ஆழ்வானின் பொருட்களைத்தான் நாம் அறிவோம். நம் குழந்தைகட்கு பூமி பற்றி சொல்லும்போது கண்டம், கடல், நிலம், தாவரம், விலங்கு, பாறை போன்ற விசயங்களையும் சேர்த்துத்தானே சொல்லுகின்றோம். அதுபோல்தான் வானியலும், வான் பொருட்களும். பூமிக்கு வெளியே வளிமண்டலம் தாண்டி என்ன இருக்கிறது? காற்றில்லாத வெற்றிடம், அது தாண்டி கோள்கள், விண்மீன், அதனைச்சார்ந்த கோள்கள் எல்லாம் உள்ளன. அதுமட்டுமா, புவியின் துருவங்களில் உண்டாகும் துருவ ஒளி, வெகு தொலைவில் பிரபஞ்ச கதிர்வீச்சு என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. இவை இயற்பியல், வேதியியல், கணிதம் தொடர்பானவைதான்.
பழங்கால வான்நோக்கு இடங்கள்
 நாம் வானை நோக்குவது என்பது காலம்காலமாய் கடைப்பிடித்துவரும் பொழுது போக்குகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் தான் பார்த்துத் தெரிந்த தகவல்களை குகைகளிலும், களிமண் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் மிகப்பாதுகாப்பாக பதிவு செய்துள்ளான். முற்காலத்தில் சாதாரணமாய் கண்ணுக்குப் புலப்படும் வான்பொருட்களின் நகர்வு கண்டு காலம், நேரம் கணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் முன்பு வளைய வடிவில் அமைக்கப்பட்ட நீண்ட நெடும் கற்பாறைகள் வான்நோக்கு கற்கள் என அழைக்கப்பட்டன. இதன் இடைவெளி வழியே சூரியனைப் பார்த்து நேரம் காலம் அறியப்பட்டது.
சோதிடத்தின் பிறப்பு...
 நவீன வானவியல் என்பது சோதிடத்துடன் ஒன்றாக சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டு குழம்புவதோ குழப்புவதோ இல்லை. சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். இதன்பொருள் விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே. (Astro-Star : Logy – belief / study). சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. உலகில் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வான்பொருட்கள் நகர்வதே காரணம் என கற்பனை செய்துகொண்டான். வானவியல், சோதிடம் இரண்டும் வேறு வேறு துறைகள் தான். ஆனால் இரண்டும் வான் பொருட்களை ஆதாரமாகக்கொண்டே உருவானவை. இரண்டிற்கும் பொதுவான துவக்க அம்சங்கள் உண்டு. சோதிடம் சூரியன், சூரியனைச்சுற்றும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சூரியக்குடும்பத்தின் பிற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடுவதே இல்லை. அதுமட்டுமல்ல, சோதிடக்கட்டத்தில் நம் குடும்பத்தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கும் கோளின் பதவி தரப்படுகிறது. பாம்பு என்ற ஒன்றைப் புகுத்தி அதன் தலையை வெட்டி தனியாக்கி தலைக்கும், பாம்புக்கும் தனித்தனியாக ராகு, கேது என்று பட்டமும் கொடுக்கின்றனர். ராகு, கேது என்ற கோள்கள் வானவியலில் கிடையாது. இவை சோதிடரின் கற்பனையே...
பழங்கால வானவியல்
 சோதிடமும், வானவியலும் பழங்கால நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன. நாகரிகம் வளர வளர பாபிலோனியா, பெர்சியா, எகிப்து பழங்கால கிரிஸ், இந்தியா, சீனா போன்ற நாகரிகங்களில் வான்நோக்கு கூடங்கள் கட்டப்பட்டன. எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமீடுகளின் வழியே வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சிரியஸ் விண்மீன்களைப் பார்க்கலாம். அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர். பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. கோள்களின் நகர்வு சூரியன், சந்திரன், பூமியின் தன்மை பற்றி அறியப்பட்டது. நாம் ஊர் ஊராக அழைந்து கொண்டு இருப்பவரை பரதேசி என்று குறிப்பிடுவோமே... அதேபோல நிற்காமல் அலைந்து கொண்டிருக்கும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை கோள்கள் என்றே அழைத்தனர்.
ஒண்டவந்த பிடாரி
 அண்டம் போகட்டும். ஜோதிடம் எப்படி, காலம் காலமாக தனக்கு தெரிந்த விஷ‌யங்களை மனிதன் வானில் பார்க்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன. அக்காலகட்டத்தில் வாழ்ந்த அறிவு ஜீவிகள் இரண்டையும் தொடர்புபடுத்தி சாதாரண பாமர மக்களிடம் தெரிவிக்கின்றனர். மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் நிகழ்வுகளும், நகர்வுகளும் காரணம் என்பது சுவையாகமிருந்தது. ஆனால் வெளிச்சப்பொருட்களான சூரியன் சந்திரனுக்கான காரணங்கள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நம் ஊருக்கு யாராவது தெரியாதவர் வந்து நடமாடினால் அவரைப்பற்றி நமக்குத்தோன்றியதெல்லாம்.. சும்மா எடுத்துவிடுவதில்லையா, அதுபோல் தான் இதுவும். எனவே வானில் சூரியன், சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்க தொடங்கினர். பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் பின்னணி. சோதிடம் முக்கியமாக மன்னர்களின் வாழ்நாள், வழித்தோன்றல்களுக்கு காரண காரியம் மற்றும் குறிசொல்லத்தொடங்கி பாமர மக்களிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இவ்வாறு தான் இன்று அதுபோக வீடுகட்டுதல். சமையலறை, கழிப்பறை, நடந்துபோதல் போன்றவைகளுக்கும் கூட வாஸ்து, தாஸ்து என பார்க்க ஆரம்பித்துவிட்டனர். முயற்சியை ஒதுக்கும் போலிமையின் நிகழ்வுகள் இவை.
கதை சொல்லவா..
 சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிக குறைவாக உள்ளதால் இதனை போலி அறிவியல் என்றே அழைக்கிறோம். இந்த நம்பிக்கை பழங்கால நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்தது. நம் பிரச்சனைக்கு யாராவது வழி காட்டமாட்டார்களா, உதவிக்கரம் நீட்டமாட்டார்களா என்ற பரிதவிப்பிலும் நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை, யாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கை குறைவாலும், செழிப்புடன் வளர்ந்தது சோதிடம். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் இந்த இடத்தில் இருந்தபோது இந்த நிகழ்வு நடந்ததது என்ற தற்செயல் நிகழ்வாலும் உருவானதுதான் சோதிடம் ஆனதால் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாம் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்தனர். பலவகை நாகரிகங்களிலும் அவர்களின் கணிப்புப்படியே சோதிடம் உருவாக்கப்பட்டிருந்ததது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் அவற்றில் கணிப்பு ஒன்றையொன்று சார்ந்ததில்லை; தனித்தனியே உருவானவையே. வான்பொருட்கள் பற்றிய கணிப்பு மட்டும் எல்லா நாகரிகங்களிலும், எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. சீன சோதிட உருவாக்கமும் அதன் பரிணாமமும் வேறு விதமானவை.
இந்திய சோதிடம்
 இந்தியாவில் வானில் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும் பிரித்துள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டுள்ளது. தமிழ் சோதிடத்தில் உள்ள ஒரு விண்மீன் என்பது வானில் பல விண்மீன் தொகுதிகளைக்கூட குறிக்கிறது. (உதாரணம் உத்திராடம்) வானில் தெரியும் விண்மீன்களை கிழக்கில் இருந்து மேற்காகவே நாம் ராசிமண்டலத்தில் சேர்க்கிறோம். இது ராசி மண்டல வளையம் எனப்படுகிறது. இவை தெரிவதை சூரிய விதி என்றும் சொல்கிறோம். இது நிலநடுக்கோட்டிலிருந்து 23 ½ பாகை சரிந்துள்ளது. சூரிய வீதியும், நிலநடுக்கோடும் சந்திக்கும் இடத்தில் சமகால நாட்கள் அமைந்துள்ளன. வருடத்தில் அவை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 என 2 நாட்களில் நிகழும். தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்று கூறுகிறோம். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் கணிப்புப்படி வானின் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாக பிரித்துள்ளனர். இவற்றின் முக்கியமானவை வடதுருவ பெருங்கரடிக்கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச்சிலுவை ஆகியவை. இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தை சுற்றிவருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மேற்காக உள்ள விண்மீன்கள் பூமியின் சூழற்சியால் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல தோன்றுகிறது.
நீங்கள் முன்னிரவில் அடிவானில் தோன்றும் விண்மீன் ஒன்றின் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் கவனியுங்கள். அந்த விண்மீன் 4 நிமிடம் தாமதமாகவே வானில் தெரியும். காரணம் நம் பூமியின் சூழற்சியால்தான். மேலும் விண்மீன்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் என்றோ பார்த்த விண்மீன்களை கணக்கில் கொண்டு சோதிடர்கள் சோதிடம் கணிக்கின்றனர். அனைத்து விண்மீன்களும் தங்களின் இடத்திலிருந்து என்றோ இடம் பெயர்ந்துவிட்டன. சோதிடர்கள் கணிக்கும் விண்மீன்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. உதாரணமாக திருவாதிரை விண்மீன் 640 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நனவும், நினைப்பும் வேறு வேறாக உள்ளது நண்பா! தமிழ் சோதிடத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை 3ம் சேர்ந்தது மேஷ‌ராசி. ஆனால் 3 நட்சத்திரங்களும் தனித்தனி விண்மீன் தொகுதிகள். கார்த்திகை விண்மீன்தொகுதியில் ஆறு பெரிய விண்மீன்களும் அதற்குள் ஏராளமான விண்மீன் திரள்களும் உள்ளன.
பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)

Sunday, April 18, 2010

சீதையிடம் சிக்கிய இராவணன்

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், ‘இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்’ என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச்செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்கவேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத்தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், ‘முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுதுபடைக்கிறாள்; “உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்” என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, “வாயிற் படியின் வழியே தன் கணவனும்,கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்” என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள்
என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ……. ஆசை மேலிட்டு, ‘தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின்தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும்சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப்
பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை
சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல்இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள்என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் ‘காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் -புரண்டன’ (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

‘விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.’

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் ‘ஏறும்பொழுது’ துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, ‘பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே’ (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், ‘சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது’ (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான்
விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தாதேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - ‘இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது’ என்று கூறப்படுகிறது.

‘இனி நீ நாணமுறற்க’ இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன
பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் ‘இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து
சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

——–தந்தைபெரியார்-நூல்:”இராமாயணக்குறிப்புகள்”

Saturday, April 17, 2010

கன்னடகாரர் பெரியார்


பெரியார் கன்னடர் (தமிழர் அல்லாதவர்) என்றும், அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்கள்.

பெரியார் தனது 95 வயது வரையிலும் சமூக சமத்துவத்திற்காகவே தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பேசினார்; போராடினார். சமூகத்தில் நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் நேரடியாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி சாடினார் பெரியார். பெரியாரின் 60 ஆண்டுகால சமூகப் பணியின் முக்கிய கூறுகளாக பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுக்கலாம்.

அவர் ஓர் ஆணாக இருந்தபோதும், அக்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் சிந்திக்காத, பேசாத அளவிற்கு அதிகமாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். அவரது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் இன்றளவிலும் பெண்ணிய சிந்தனைகளுக்கு ஓர் அடிப்படை ஆவணமாக திகழ்கிறது. அக்காலத்தில் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களான கணவனை இழந்தவர்கள், ‘தாசிகள் என்று தங்களை கருதிக் கொள்பவர்கள்’ போன்றவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கவும் அவர்களும் சமூகத்தில் இயல்பாக வாழவுமான தன்னம்பிக்கையை அளிப்பதற்காக அவர் தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொண்டார். இன்று இந்தியச் சூழலில் பேசப்படுகிற பெண்ணிய கருத்துக்களுக்கு முன்னோடி பெரியார் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண் விடுதலைக்காக அவர் ஆற்றி வந்த பணிகளுக்காக பெண்கள் திரண்டு அவருக்கு சூட்டிய பெயர்தான் ‘பெரியார்’. பெண் விடுதலைக்கான கருத்துக்களை பெண்கள்தான் பேச வேண்டும், பேச முடியும் என்பது உண்மையே. ஆனால் நேர்மையாக பெண்களின் சிக்கல்களைப் புரிந்து அவர்கள் விடுதலை பெறத் தேவையான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக பெரியாரின் கருத்துக்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின் அதனால் இழப்பு பெண்களுக்கே.

[Periyar] சாதியின் பெயரால் சமூகத்தில் இழிநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவைப் போக்கி, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க சாதி ஒழிப்பே முதன்மையான வழி என வரையறுத்தவர் பெரியார். இந்து மத ஒழிப்பு என்பது, அது கட்டமைத்திருக்கும் சாதியை ஒழிப்பதும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள படிநிலை சமூகத்தைத் தகர்த்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவதுமே. இந்து மதமும் சாதியும் ஒழிந்தால் மட்டுமே தமிழ்ச் சமூகம் சமத்துவ சமூகமாக மலரும் என்பதை அவர் உறுதிபடக் கூறினார். அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வலியுறுத்திய கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற அனைத்தும் அடிப்படையில் சாதி ஒழிப்பையும் மதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் விடிவையும் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. மூட நம்பிக்கைகளிலேயே பெரும் மூட நம்பிக்கையாக அவர் சாதியைப் பார்த்தார்.

சமூகத்தின் வளங்களைச் சுரண்டி கொழிக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களுக்குரிய பங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற சாதி ஒழிப்பே சரியான வழி எனக் கூறினார். ஆதிக்க சாதியினர் ஒரு போதும் சாதி ஒழிப்பை விரும்பியதில்லை. இந்து மதம் காப்பாற்றப் படுவது என்பது ஆதிக்க சாதியினரின் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் வலுப்படுத்துவதும் ஆகும். ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படும் ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருந்தவர்களுக்கு இழப்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவும் ஏற்படும் என்பது நியதி. ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்திருந்த போதும் பெரியார் சாதி ஒழிப்பையே முதன்மைப்படுத்தினார். அவர் ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற காரணத்தைக் கூறி அவரது சாதி ஒழிப்புக் கருத்துக்களை புறந்தள்ளுவது சமூக இழப்பையே ஏற்படுத்தும்.

அதைப் போலவே, பெரியாரின் தாய் மொழி, சரியாகச் சொல்வதென்றால் அவரது முன்னோர்களின் தாய்மொழி தமிழாக இல்லாதபோதும், அவர் தனது வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காகவே உழைத்ததோடு, தமிழராகவே வாழ்ந்தார். தனது செயற்களமாக தமிழ்ப் பேசும் பகுதிகளையே கொண்டும் இருந்தார். பார்ப்பன பனியா ஆதிக்கத்திலிருந்த இந்திய தேசியத்தின் கீழ் தமிழர்களுக்கு விடிவில்லை என்பதோடு, சாதி ஒழிப்பிற்கும் சமத்துவ சமூகத்திற்கும் அது தடையும் கூட என்பதை உணர்ந்திருந்த அவர், அதிலிருந்து தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து முதன் முதலில் பேசியவர் பெரியாரே. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன் வைத்தவரும் அதற்காக போராட்டங்கள் நடத்தியவரும் பெரியாரே. அக்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய பல தலைவர்களும் சாதிக்குள்ளோ அல்லது இந்திய தேசியத்தைத் தாண்டாமலோ பேசியபோது இந்திய தேசியத்திலிருந்து வேறான, சாதி ஒழிந்த, சமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்குமான சமத்துவமான தமிழ்த் தேசியத்தை பேசியவர் பெரியார் மட்டுமே.

எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் மீண்டும் ஓர் ஆதிக்கத்தை நோக்கியதாக இருக்குமாயின் அந்த விடுதலைப் போராட்டத்தில் பொருளே இல்லை. அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஆதிக்கங்களையும் களைந்ததான விடுதலை மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். அதனால்தான் சாதிய ஒடுக்குமுறைகள் நீடிக்கும் நிலையில் இந்திய விடுதலை வெறுமனே ஓர் அதிகார மாற்றமே என்று கூறினார் பெரியார். அதைப் போலவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், வர்க்க ஆதிக்கம் ஆகியவற்றையும் நீக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலை நிலைத்திருக்க முடியும் என்பதை வலியுறுத்தியவர் பெரியார்.

பெரியாரின் இந்த பணிகள் அனைத்தும் சமூக மேம்பாட்டிற்கானதே அன்றி அவரது சொந்த நலன்களுக்கானது அல்ல. அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்: “ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.” – நான் யார் – 1973

நாம் அவரை ‘தமிழர் தலைவராக’ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போராடவில்லை. மக்கள் மீது, மானுடத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு மானுடத்தின் மேம்பாட்டிற்காக தனக்கு சரியெனப் பட்டவற்றிற்காக போராடினாரே ஒழிய யாருடைய பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அல்ல. எங்கோ மாடு மேய்த்துக் கொண்டும், களைப் பறித்துக் கொண்டும், கல்லை வணங்கிக் கொண்டும் இருந்திருக்க வேண்டிய நாம் இன்று மானமும் அறிவும் உள்ள மக்களாக, கற்றறிந்தவர்களாக இப்படி வாதிட்டுக் கொண்டு இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் அவர்.

ஓடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்குமான அவரது கருத்துக்களையும் பணிகளையும் அவரையும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கே. ஏற்றுக் கொண்டவர்கள் பயனடைவார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நட்டமடைவார்கள். உண்மையில் – பெரியார் ஒரு ஆண், ஆதிக்க சாதியாளர், கன்னடர் – இப்படியான தரமற்ற அடிப்படையற்ற வாதங்களை முன் வைப்பவர்கள் தங்கள் அறியாமையையே வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

சொல்லப் போனால், இப்படியான பொருத்தமற்றக் காரணங்களைக் கூறி பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்களின் வறட்டு கெளரவத்திற்கும், வீம்பிற்கும் பலியாகப் போவது தமிழர்களின் நலனே அன்றி பெரியாரின் பெருமை அல்ல.

நன்றி - பூங்குழலி மீனகம்.கம்



Thursday, April 15, 2010

ஈழத்தில் நிலத்தையும், தமிழகத்தில் மொழியையும் தமிழர்கள் இழக்கிறார்கள்


தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில்,

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.

இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.

26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும்.

இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails